Skip to main content

சாலையில் உலாவுவது மேகங்கள் அல்ல; கேள்விக்குறியாகும் நீர் நிலைகள்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

நீர்நிலைகளில் கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறை நீர் கலப்பதால் நீர்நிலை மாசடைவதுடன் சில இடங்களில் ரசாயன மாற்றம் காரணமாக வெண் நுரை பொங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நுரை நுரையாகப் பொங்கி வந்தது. நிலத்தடி நீர் வரை ரசாயன கழிவுநீர் சென்றுவிட்டதை இந்த சம்பவம் உணர்த்தியிருந்தது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாயிலிருந்து திடீரென வெண் நுரைகள் பஞ்சு போன்று சாலையில் பரவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

 

இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது படும் இந்த நுரை அரிப்பை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அயன் பாப்பாகுடி கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பீரோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நீர் ஆகியவை கலக்கிறது. இதனால் கண்மாய் நீர் மாசடைந்து இதுபோன்ற வெண் நுரை பொங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.