/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_117.jpg)
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம்(14.8.2024) இரவு 9 மணியளவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த வடமாநில இளைஞர் ஒருவர் தனது ஆடைகளைக் கழற்றிவிட்டு பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து சக மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் மருத்துவர் கூறியுள்ளார். இதனிடையே நள்ளிரவில் உடம்பில் காயங்களுடன் அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த அந்த வடமாநில இளைஞரை அடையாளம் கண்ட பெண் பயிற்சி மருத்துவர், அவரை பிடித்து ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் மயான்க்கலார் என்பது என்பதும் தெரியவந்தது. மேலும் அவருடன் வந்தவர்கள், ரயில் நிலையத்திலேயே மயான்க்கலாரை விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
இருப்பினும் பயிற்சி பெண் மருத்துவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக அந்த இளைஞரைக் கைது செய்த போலீஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நடந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று காலை பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில், கோவையில் பயிற்சி பெண் மருத்துவரிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)