
பொதுவாகவே குழந்தைகள் தமிழகத்தில்தான் அதிகளவில் கடத்தப்படுகின்றனர். கடத்தப்படும் குழந்தைகள், பிச்சை எடுப்பதற்கும், திருட்டுத் தொழிலுக்கும், போதைப் பொருள் விற்பனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். ஆனால், தற்போது வடமாநிலக் குழந்தைத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு வருவது, சற்று அதிர்ச்சிக்குரிய சம்பவம்தான். கடந்த 16-ஆம் தேதி, திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில், சந்தேகப்படும்படியாக, 3 வடமாநிலச் சிறுவா்களுடன், இரண்டு பேர் அதிகாலை வந்து இறங்கியுள்ளனா். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டவுடன், அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் விசாரித்தனர்.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்தபோது, அவா்கள் முசாபர்பூரைச் சேர்ந்த சூரத்குமார், ஷானி மற்றும் கமலேஷ் ஆகியோர் எனத் தெரிய வந்திருக்கிறது. எனவே அவர்களோடு வந்த சிறுவர்கள் குறித்து விசாரித்த போது, இவர்கள் அனைவரும் பீகாரில் இருந்து சென்னை வரை விமானத்தில் வந்ததாகவும், பிறகு அங்கிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். மேலும், திருச்சியில் பல இடங்களில் கிளை பரப்பி, கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனத்தில், கார் சீட் தைக்கும் பணிக்காக வேலைக்கு அழைத்து வரப்பட்டதாக, அவர்கள் கூற, அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களின் ஆதார் கார்டுகளை வாங்கிப் பார்த்திருக்கிறார். அதில், அவர்கள் மூவருமே 18 வயதிற்குக் கீழ் இருப்பதை உறுதிப்படுத்தினர். உடனே அந்த அதிகாரிகள், இதுகுறித்து மேலதிகாரிகளிடம் சொல்ல, அவர்களைப் பாதுகாப்பாகக் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டிருக்கிறார்கள்.

விசயம் பெரிதாவதைக் கண்ட சூரத் குமார் ஷைனி, யார் யாருக்கோ ஃபோன் செய்து விசயத்தைக் கூறியதோடு, ‘அந்த மூவரும் தனக்கு உறவுக்கார பையன்கள்’ என்றும், ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக அவர்களை திருச்சி அழைத்து வந்ததாகவும் கூறி அவர்களை அங்கிருந்து மீட்டுச் செல்வதிலேயே, குறியாக இருந்திருக்கிறார். இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து நழுவிவிட்டார்கள் குழந்தைகளுடன் வந்தவர்கள்.
அந்தச் சிறுவர்கள் மூவரையும் திருச்சி கலையரங்கம் வளாகத்திலுள்ள குழந்தைகள் நலக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தங்க வைத்திருக்கிறார்கள். அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், தலா 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட பிறகுதான், அவர்களை இங்கு அனுப்பி வைத்ததாகவும், ‘எப்போது ஊர் திரும்புவோம்?’ எனத் தங்களுக்கே தெரியாது எனவும் கூறியுள்ளனா். மேலும், மொத்தம் தாங்கள் 9 பேர் சென்னை வந்து இறங்கியதாகவும், மற்ற 6 பேர் எங்கு வேலைக்குச் சென்றார்கள் எனத் தெரியாது எனவும் கூறியிருக்கிறார்கள்.

இப்பிரச்சனை குறித்து திருச்சி மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், “இதற்கு ஏஜென்டாக செயல்பட்ட சூரத் குமார், ஷைனி மீது பிணையில் வெளிவர முடியாத ஐ.பி.சி. பிரிவு 370ன் கீழ், குழந்தைகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர் ரயில்வே காவல்துறையினர். இவர்கள் மூவரின் வறுமை மற்றும் கல்வி அறிவின்மையைப் பயன்படுத்தி, பணம் கொடுத்துக் கடத்தி வரப்பட்டிருக்கின்றனர். இதுபோல, வரும் சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர் வந்தால் மட்டுமே, அவர்களோடு நாங்கள் அனுப்ப முடியும். அதுவரை அவர்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்படுவார்கள்” என்றார் வழக்கறிஞர் என்.கிருஷ்ணமூர்த்தி.

கடைக்குக் கடை, ‘இங்கு குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை’ என எழுதப்பட்டிருக்கும் சூழலில், திருச்சியில் மட்டும் சுமார் 60-க்கும் மேற்பட்ட வடமாநிலக் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருக்கலாம் என அதிர்ச்சியளிக்கும் சமூக ஆர்வலர்கள், இதைத் தடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறையினரோ நகரப்பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் சோதனை எதுவுமே நடத்தாமல், ‘அழுத்தம்’ ஏற்படும் நேரத்தில் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் பெயரளவில் ‘ரெய்டு’ நடத்துவதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள்.
கடத்தி வரப்பட்ட அந்த வடமாநிலக் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களை குழந்தைகள் நலக்குழுவில் சேர்க்கத் துவங்கியபோது, ‘’நான் ஐ.எஸ். ஏ.சி பேசுகிறேன்’ எனக் கூறி அந்த மூவரையும் விடுவிக்குமாறு ‘சைல்ட் லைன்’ களப்பணியாளர்களை ஒரு நபர் பலமுறை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பிறகு, இவ்விசயம் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ஜே.லோகநாதனின் கவனத்திற்குச் செல்லவே, அப்போதுதான், அந்த நபர் மாநகர நுண்ணறிப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி என்பது தெரிய வந்ததாம். ‘யார் சொன்னாலும் கேக்காதீங்க...’ என சீரியஸ் ஆகிவிட்டாராம் திருச்சி கமிசனர்.

அதன் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான ‘சியர்ஸ்’ இன் தலைவரும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருமான சு.சிவராசு, திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோரின் தீவிர முயற்சியால் மட்டுமே, செக்சன் 370-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி ரயில்வே காவல்துறை வரலாற்றிலேயே இத்தகைய எஃப்.ஐ.ஆர்., இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பாதுகாப்பு மையத்தில் வைத்து, அந்தச் சிறுவர்களை விசாரித்துக் கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த ஒரு வடமாநில நபர், தனது பெயர் கல்யாண் சிங் என்றும், இவர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என்றும் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக வந்தார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர்களை என்னோடு அனுப்பிவிடுங்கள்’ எனவும் தட்டுத்தடுமாறி தமிழிலேயே பேசியிருக்கிறார். பிறகு, கல்யாண் சிங்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணையைக் களப்பணியாளர்கள் துவங்கவே, அடுத்த நிமிடம் அவரும் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டாராம்.