
கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் மதுபாலன், செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது சிதம்பரம் உட்கோட்டத்தில் முக்கியமாக அனைத்து கால்வாய்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் அதனை அகற்றி தரவேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. அது சரிசெய்யப்படும்.
அதேபோல பல்நோக்கு ஆய்வு முகாம் 10 இடங்களில் சிதம்பரம் கோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்கள் 19 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களுக்கு வடகிழக்குப் பருவமழையொட்டி முன்னேற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் பகுதிகளில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மேலும், நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நிரந்தரமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் புயல் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை தன்னார்வலர்களையும் ஈடுபடுத்துவது குறித்தான கூட்டம் தனியாக நடத்தப்படும்.” என சார் ஆட்சியர் மதுபாலன் கூறினார்.