/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1376.jpg)
சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரத்திற்கு அருகே ஓடும் கொள்ளிடம், பரவனாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெல் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையொட்டி சிதம்பரம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மீட்கத்தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொதுமக்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயாராக உள்ளனர். சாலை திடீரென பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்து போக்குவரத்து நெரிசலைசரி செய்வார்கள். பொக்ளின் இயந்திரம், மரம் அறுக்கும் கருவி, தண்ணீரில் பொதுமக்கள் மாட்டிக் கொண்டால் அவர்களை மீட்பது உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். பொதுமக்கள் வெள்ள நீர் சூழும் நிலை ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தால் உடனடியாக அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)