North state workers -highcourt

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பசியால் வாடும் வட மாநில தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் டி.வி.எஸ், யமகா போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்த சுமார் 1600 தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல், தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் - சேலையனூர், ஆரனேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரணம் இதுவரை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக வேலையில்லாமலும், உணவில்லாமலும் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய தலைவரின் மேற்பார்வையில் உணவு உள்ளிட்ட அரசின் நிவாரணம் வழங்க உத்தரவிடக்கோரி, செங்கல்பட்டைச் சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அதில், பசியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரணம் மட்டுமல்லாமல், அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியத் தொகையைபெற்று தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களையும் கண்டறிந்து அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதிய தொகையை பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.