/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_557.jpg)
ஓமலூர் அருகே, நள்ளிரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக வடமாநில வாலிபர்கள் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர் ஒருவர்காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த, காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிப்பாடி, குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் இரும்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், 15க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் வேலை செய்கின்றனர். கடந்த ஒரு வாரமாக தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சட்டூர், கொன்ரெட்டியூர், பள்ளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, தும்பிப்பாடியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த மூர்த்தி அந்த நபரை தாக்க முயன்றார். ஆனால் அந்த மர்ம நபர் மூர்த்தியைத் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஆக. 18ம் தேதி இரவு நள்ளிரவில் பள்ளர் காலனியில் 3 வாலிபர்கள் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கூச்சல் போடவே, இருவர் தப்பி ஓடிவிட்டனர். மற்றொருவரை துரத்திச்சென்று பிடிக்க முயன்றபோது அவர், ஆறுமுகம் என்பவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டார்.
காயம் அடைந்த ஆறுமுகம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய வடமாநில இளைஞர், குதிரைக்குத்தி பள்ளத்தில் உள்ள இரும்பு நிறுவனத்தில் தஞ்சம் அடைந்தார். பொதுமக்கள் விரட்டிச்சென்று அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அவரிடம் விசாரித்தபோது, இத்தனை நாள்களாக நள்ளிரவு நேரங்களில் வீடு புகுந்து பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள்தான் என்பது தெரிய வந்தது. அந்த வாலிபரை பிடித்துச்சென்று ஓமலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வடமாநில வாலிபர்களை வேலைக்கு அமர்த்தியதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட இரும்பு நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் முழக்கமிட்டனர்.
தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறை டிஎஸ்பி சங்கீதா, ஆய்வாளர் (பொறுப்பு) இந்திரா மற்றும் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி சங்கீதா உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட வடமாநில வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, அவரை கைது செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் அந்த வாலிபரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)