North Indian youth arrested in theft case

Advertisment

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ள கிளிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விஜயபிரபாகரன்(31). கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் தனது ஊரிலிருந்து பெண்ணாடம் நோக்கி வரும் சாலை ஓரமாக மறைவான பகுதிக்கு சென்று இயற்கை உபாதை கழித்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஜய பிரபாகரன் மடக்கி அவரைத் தாக்கி அவரிடம் இருந்து 2,500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

விஜய பிரபாகரன் சம்பவத்தின்போது போட்ட கூச்சலில், அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்தனர். அவர்களிடம் நான்கு திருடர்கள் பணத்தை பிடுங்கி செல்வது குறித்து விஜய் பிரபாகரன் கூறினார். அவர்கள், அந்த நான்கு திருடர்களையும் துரத்தி சென்றனர். அதில் 3 பேர் தப்பி ஓடிவிட, ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ளார். அவரை ஊரில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

அதோடு பிடிபட்ட அந்த திருடனிடம் ஹிந்தி தெரிந்த இளைஞர்கள், அவர் குறித்து விவரம் கேட்டபோது பிடிபட்ட திருடன், ”எங்கள் ஊரிலிருந்து 40-பேர் இங்கு வந்துள்ளோம். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் வேறுவழியின்றி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்துள்ளார். ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விருத்தாசலம் ஏ.எஸ்.பி அங்கிட் ஜெயின், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பிடிபட்ட அந்த திருடனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தப்பியோடிய மற்ற மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

இதேபோன்று ஆவினங்குடி, கூடலூர், திருவட்டத்துறை, கொடிகளம் உட்பட சாலையோர கிராமங்களில் இரவு நேரங்களில் வடமாநில இளைஞர்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. இப்பகுதியில் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்துள்ளனர். அவர்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.