Skip to main content

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; வட மாநில வாலிபர் கைது! 

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

north indian youth arrested by salem police cannabis case

 

சேலத்தில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொடி, கஞ்சா சிகரெட் விற்பனை செய்து வந்ததாக வட மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், ஜான்சன்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அந்த வாலிபரிடம் இருந்து 700 கிராம் கஞ்சா பொடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிஹேக் பட்டேல் (25) என்பதும், அவர் சேலம் செவ்வாய்பேட்டையில் தங்கியிருந்து வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். 

 

இவரும், இவருடைய கூட்டாளி ஆகாஷ் என்பவரும் சேர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொடியை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, பொடியாக்கி அவற்றை 8 கிராம் மற்றும் 10 கிராம் பொட்டலங்களாக கட்டி 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், கஞ்சா சிகரெட்டாகவும் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். அபிஹேக் பட்டேலிடம் இருந்து அலைப்பேசி ஒன்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இவருடைய கூட்டாளிகள் யார் யார்? கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பது எப்படி? கூட்டாளி ஆகாஷ் எங்கே சென்றார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்