North Indian woman who came in fear of human sacrifice; Tamil Nadu is sure to provide security

Advertisment

நரபலி அச்சத்தில் தமிழ்நாடுவந்த வட இந்திய பெண்ணுக்குதமிழ்நாடு பாதுகாப்பளிக்கும் என தமிழக காவல்துறை உறுதி அளித்துள்ளது.

ஷாலினி ஷர்மா மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.ஷாலினி தாக்கல் செய்த மனுவில், சுதா ஷர்மா என்பவர் தனது வளர்ப்புத் தாய். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்.தனது வளர்ப்புத் தாயான சுதா ஷர்மா மாந்திரீகங்கள், மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், ஏற்கனவே தனது 10 வயது சகோதரர் மற்றும் இன்னும் 2 பேரை நரபலி கொடுத்துள்ளார் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது காவல்துறையில் புகாரளிக்க எவரும் தயாராக இல்லை என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ப்புத் தாயிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது நண்பரின் உதவியுடன் சென்னை வந்துள்ளதாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் வீட்டில் தங்கியுள்ளதாகவும், குடும்பத்தினரும் ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக தன்னை போபால் அழைத்துச் சென்றுவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படி போபால் கொண்டு சென்றுவிட்டால் தன்னை நரபலி கொடுத்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் ஷாலினி ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி ஷாலினி ஷர்மா கேட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி ஜீ.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து மனுதாரரான ஷாலினி ஷர்மா ஆஜர் ஆனார். அப்போது பேசிய அவர், “தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பிநரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கு குறித்து ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார். மேலும், பெண்ணுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறையும் உத்தரவாதம் அளித்துள்ளது.