/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3606.jpg)
சேலத்தில்மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் ஹாரன் அடித்தும் சாலையில் நண்பர்களுடன் நடந்து சென்ற வடமாநிலத்தொழிலாளி வழிவிடாமல் சென்றதால்அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்முத்துக்குமார் (36). இவர் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சகானி மகன் குருசரண் சகானி (32) என்பவர் வேலை செய்து வந்தார். இவருடன் வேலை செய்யும் அனில் (30), ராகேஷ் (32), அஜய் (29), ஆலோ (28) ஆகியோர் ஜனவரி15ம் தேதிதாதகாப்பட்டி கேட் காளியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அதே வழியாகமூணாங்கரடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (25), கருங்கல்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (22) ஆகிய இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் சாலையில் நடந்து சென்றவர்களைப் பார்த்தவுடன் 'ஹாரன்' அடித்துள்ளனர். அதற்கு அவர்கள் வழிவிடாமல் சென்றுள்ளார். அப்போது ராஜா, சீனிவாசன் ஆகியோருக்கும் குருசரண் சகானி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் இருதரப்புக்கும் கைகலப்பு மூண்டது. இந்தத்தாக்குதலில் குருசரண் சகானி மயங்கி விழுந்தார். உடனே ராஜாவும்சீனிவாசனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மயங்கி விழுந்த குருசரண் சகானியைஉடன் வந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்துறை உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தப்பிச்சென்ற ராஜா, சீனிவாசன் ஆகியோர் அன்னதானப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இலங்கேஸ்வரன் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்கள்இருவரையும் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் விஏஓ ஒப்படைத்தார். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜா, சீனிவாசன் ஆகியோர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம்: நாங்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் மூணாங்கரடு பகுதியில் சென்றோம். அப்போது குருசரண் சகானி, அவருடைய நண்பர்கள் எங்களுக்கு வழிவிடாமல் சாலையில் நடந்து சென்றனர். நாங்கள் ஹாரன் அடித்தும் அவர்கள் சாலையை விட்டு ஒதுங்கவில்லை.இதனால் அவர்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதில், குருசரண் சகானி அங்கிருந்த ஒரு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டார். இதனால் பயந்துபோன நாங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம். தற்போதுதான் அவர் இறந்துவிட்டது எங்களுக்குத் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)