/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3116.jpg)
திருச்சியில் உள்ள வயலூர் முருகன் கோவிலில் முத்துக்குமார முருகன் பிரதான தெய்வமாக இருந்தாலும், அதனுடன் சேர்த்து ஆதி நாதர், ஆதி நாயகி, பொய்யாக் கணபதி முத்துக்குமாரர் ஆகிய கடவுள்களும் உள்ளன. இந்தக் கோவிலில் உள்ள மேற்குறிப்பிட்ட அனைத்து கடவுள்கள் சன்னதிகளிலும் ஏற்கனவே நிரந்தரமாக 8 பிராமணர்அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வகுப்பினரையும் அர்ச்சகராக பல்வேறு கோயில்களில் நியமித்தது.
இந்த வயலூர் கோவிலில் பிராமணர்கள் அல்லாத ஐந்து பேர் கோவில் பணியில் இருந்தனர். இவர்களில் ஜெயபாலன் மற்றும் பிரபு ஆகிய இரண்டு பேர் தற்போது இந்து சமய அறநிலையத் துறையால் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூவரில், ஒருவர் தினக்கூலி அடிப்படையிலும், இருவர் கடந்த 12 வருடங்களாக சம்பளம் ஏதும் வாங்காமல் பணி நிரந்தரமாகும் என்ற நோக்கத்திலும் சிறு அர்ச்சகர்களாக இருந்து வந்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை உத்தரவுப்படி பிராமணர் அல்லாத அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட ஜெயபாலன் மற்றும் பிரபு ஆகிய இருவரும், முருகன் சன்னதி வரை சென்று அர்ச்சனை செய்யலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் நியமிக்கப்பட்டு இதுவரை கோவிலுக்குள் உள்ள கருவறைக்கு சென்று எந்தவித பூஜைகளையும் செய்ய அனுமதிக்கப்படாமல் வெளி வேலைகளை செய்யவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இருவரும் கோவிலுக்குள் நுழைந்து அர்ச்சனை செய்ய முற்பட்டபோது ஏற்கனவே இருந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் இந்த இருவரும் ஆகம விதிப்படி முறையாக அர்ச்சனை செய்ய மாட்டார்கள் என்றும், ஏற்கனவே கோவிலில் அர்ச்சனை செய்து வந்த பரம்பரையாக இருக்கும் ஆதிசைவ சிவாச்சாரியார்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்தினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_903.jpg)
இதனை அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வயலூர் கோவிலில் குவிந்தனர். மேலும் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் சமூகநீதிப் பேரவை மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஸ்ரீரங்க ஆய்வாளர், வயலூர் செயல் அலுவலர் மற்றும் அருகில் உள்ள கோவில் செயலாளர்கள் ஆகியோர் வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் விதிப்படி பிராமணர் அல்லாத ஜெயபாலன் மற்றும் பிரபு ஆகிய இருவர் கோவிலுக்கு சென்று முருகன் சன்னதியில் தமிழில் அர்ச்சனை செய்தனர். ஏற்கனவே இருந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் உள்ளே செல்லாமல் கோவில் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், மக்கள் கலை இலக்கியம், மக்கள் அதிகாரம், சமூக நீதிப் பேரவை மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கோவிலுக்கு உள்ளே சென்று முருகன் கருவறையில் இருந்த பிராமணரல்லாத அர்ச்சகர்களை தமிழில் அர்ச்சனை செய்யக் கோரினர். அதன்படி அவர்களும் தமிழில் அர்ச்சனை செய்தனர். மேலும் திடீரென தமிழ் வாழ்க, தமிழ் கடவுள் முருகன் வாழ்க என்று அவ்வமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
இதனைக் கண்ட மற்றொரு தரப்பினர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை மாறி மாறி எழுப்பியதால் முருகன் கோவில் கருவறை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)