
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீபால முருகன் திருக்கோவில் வளாகத்தில் சமுதாயக்கூடம் வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். கோரிக்கையை ஏற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ரூ.50 லட்சம் மதிப்பில் தனது சொந்த செலவில் புதிய சமுதாய கூடத்தை கட்டிக் கொடுக்க உறுதியளித்திருந்தார்.

அதன்படி கரட்டுப்பட்டி பாலமுருகன் திருக்கோயில் வளாகத்தில் சமுதாய கூடம் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் க.சத்தியமூர்த்தி, கன்னிவாடி பேரூராட்சி மன்ற தலைவர் தன லெட்சுமி சண்முகம், துணை தலைவர் கீதா முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி மண்டபத்தை திறந்து வைத்து குத்து விளக்கை ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “இன்று என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விழா நடைபெற்று உள்ளது. காரணம் இப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் மற்றும் இதர விழாக்களை நடத்துவதுடன் தங்களுக்கு மண்டபம் வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இன்று பயன்பாட்டிற்காக திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் தங்கள் விழாக்களை நடத்த முடியும். குறிப்பாக ஆத்தூர் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் சமுதாய கூடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தேவைப்படும் கிராமங்களுக்கு பகுதிநேர நியாய விலை கடைகள், நாடக மேடைகள், கட்டிக்கொடுக்கப்படும் என்று கூறினார்.