Skip to main content

"அவ்வாறு அட்டவணை எதுவும் தயாராகவில்லை"- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 

"No such table is ready" - Minister SS Sivasankar Explanation!

 

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள உள்ள நிலையில், இதற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு அட்டவணை எதுவும் தயாராகவில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அவ்வாறு தான் பர்மிட் வழங்கப்படும். கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகச் சார்ந்த பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

 

இந்த அட்டவணையைத் தவறாக புரிந்துகொண்டு. "தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.

 

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி சூறையாடப்பட்டு. போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

 

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில், 112 கோடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். அதற்கான நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.

 

இதுபோன்று, எழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில். "கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்