no rights to stop 237 tenders in minister thangamani elected district

ஊரகப் பகுதி முன்னுரிமைத் திட்ட நிதியத்தின் கீழ், அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்து 53 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020 - 21ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தத் தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான 702 கோடி ரூபாய், ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமைத் திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முன்னுரிமைத் திட்ட நிதியத்தில் இருந்து, அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம்தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டி, நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்துத் தலைவர் தாமரைச் செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உட்பட மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் தொகுதியை வளப்படுத்தும் நோக்கத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறை கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாநிலம் முழுவதும்உள்ள 234 தொகுதிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும், தேர்தல் நெருங்குவதால் இப்பணிகளுக்கான டெண்டர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisment

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் சமமாகப் பாவிக்கப்பட்டதாகவும், தற்போதுகுமாரபாளையம் தொகுதியில் 237 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, 25 சதவீத பணிகள் துவங்கியுள்ளதாகவும், கடந்த 2016 - 17 முதல் 2019 - 20 வரையிலான நான்கு ஆண்டுகளில், ஆறு தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட சம அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்த விவரங்களையும் தாக்கல் செய்தார். மேலும், நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனஅரசுத் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்று, வழக்கை மார்ச் 4ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், குமாரபாளையம் தொகுதியில் 237 திட்டப்பணிகள் துவங்கி விட்டதால், அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது என மறுத்துவிட்டனர். மேலும், இப்பணிகளுக்கான டெண்டர் கோரியது, பணிகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்களைத் தேதி வாரியாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்க, அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.