
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு பல நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெயக்குமாரின் மனைவி, மகன்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 70 நாட்களாகியும் தற்போது வரை சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் இரவு 9 மணி வரை குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.