
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (05/06/2022) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரண்டு பொருட்களைத் தனியாரிடம் வாங்கியதால், அரசுக்கு ரூபாய் 77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்த் மிக்ஸை ஆவினுக்கு பதில் தனியாரின் வாங்குவதால் மட்டும் அரசுக்கு ரூபாய் 45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனிதா டெக்ஸ் காட் நிறுவனத்துக்கு தந்த ரூபாய் 450 கோடி ஒப்பந்தத்தில் ரூபாய் 100 கோடி ஊழல் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான தொகுப்பில் ரூபாய் 77 கோடி இழப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தர வேண்டும். ஜி ஸ்கொயர் கோவையில் 122 ஏக்கருக்கான லே அவுட்டை வழக்கத்தைவிட எட்டு நாட்களில் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது; அ.தி.மு.க. குறித்து பா.ஜ.க.வினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் பேசக்கூடாது எனக் கூறியுள்ளோம். அ.தி.மு.க.வை அழித்துதான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நாடாளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அ.தி.மு.க. எங்களுக்கு துணையாக இருந்தது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டெண்டர் விடுவதற்கு முன்பாகவே முறைகேடு நடந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் டெண்டரே விடப்பட உள்ளது; அதற்குள் நஷ்டம் என அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். டெண்டர் பணிகள் முடியும் முன்பே ஊழல் நடந்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்ணாமலை அறிவுப்பூர்வமாக புகார் வைப்பார் என நினைத்தேன்; ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்" என்று கூறியுள்ளார்.