"கல்வி, அதிகாரம், ஆளுமை இருந்தால் மட்டும் போதாது.! மனிதநேயம் இருந்தால் மட்டுமே அவன் முழு மனிதனாக முடியும்," என்பதற்கிணங்க கரோனா ஊரடங்குக் காலத்தில் தன்னுடைய காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட எளியோர்களை தேடி சென்று வலிய உதவி வருகின்றார் டிஎஸ்பி ஒருவர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு, அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு மற்றும் சாக்கோட்டை காவல் நிலையங்களையும், மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையத்தினையும் உள்ளடக்கிய காரைக்குடி துணைச்சரகக் காவல்துறையின் டிஎஸ்பியாகப் பணியாற்றி வருபவர் அருண். 2016ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், அடிப்படையில் கால்நடை மருத்துவர். துவக்கத்தில் கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் பணியாற்றியிருக்க, 2019ம் ஆண்டு காரைக்குடி காவல்துறை துணைச்சரக டிஎஸ்பி-யாக மாற்றலானார். பதவியேற்றக் காலம் தொட்டு, தன்னை சந்திக்க வரும் புகார்தாரர்களுக்கே சிறுசிறு உதவிகளை செய்தவர் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் மனித நேயத்தில் மிளிர்கின்றார்.
கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சாலையோரம் வசித்தவர்கள், சாப்பாட்டிற்கு மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில் உள்ளவர்களைகண்டறிந்து அம்மா உணவகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி பசியாற்றும் சேவையை துவக்கியது காரைக்குடி காவல்துறை துணைச்சரகம், அதேவேளையில், கட்டிடத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர்கள், சலவைத் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள், பிளாஸ்டிக் பொறுக்குபவர்கள், தினக்கூலிகள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் என தனது காவல்துறை துணைச்சரகத்திலுள்ள எளியோரைக் கண்டறிந்து, காரைக்குடி வருவாய் துறையினருடன் இணைந்து அவர்களுக்கு அரிசி, மளிகை தொகுப்புகள் மற்றும் காய்கறிகளை டன் கணக்கில் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இது இப்படியிருக்க, "நாங்கள் இங்குள்ள அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றோம். ஊரடங்கிற்கு பின் ஊர் செல்ல இயலாத நிலை." என டுவிட்டரில் மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் மாணவர்கள் பதிவிட அவர்களைதேடிசென்று ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார். அதுபோல் வெளி மாநிலத்திலிருந்து தொழிலுக்காக இடப்பெயர்ச்சியாகி காரைக்குடி வந்த வெளி மாநிலத்தார்கள் 300 நபர்களுக்கு தேவையான உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மூட்டை கணக்கில் வழங்கி பசியாற்றியது.. மனிதநேயம் ஒருபுறம் இருந்தாலும், சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி இதுவரை 506 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த காரைக்குடி துணைச்சரக காவல்துறை, கரோனா குறித்த பல விழிப்புணர்வுகளைஅளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.