Skip to main content

முக்கியப் பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை! - திருச்சி கமிஷனர் அதிரடி!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

Srirangam sorkavaasal- Opening - No one -including important- personalities- allowed - says -trichy commissioner

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, இன்று (15-12-2020) இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதன் பகல்பத்து உற்சவம் நாளை காலை துவங்க உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வைகுண்ட ஏகாதசி திருவிழா 15 -ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பு, வரும் டிசம்பர் 25 –ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்விற்கு கரோனா காரணமாக 24 -ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் (சொர்க்கவாசல் அன்று) காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எந்தவிதச் சிறப்பு அனுமதி அட்டைகளும் வழங்கப்படாது. 

 

20 நாட்கள் திருவிழாவில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு, 600 பேர் வீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் அன்று, ஆன்லைனில் பதிவுசெய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற உற்சவ நாட்களில், ஆன்லைன்மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் மற்றும் கோவிலில் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் உள்ள பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். 20நாட்களில் உபயதாரர்களுக்குக்கூட சிறப்பு அனுமதி கிடையாது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 காவல்துறையினர் சுழற்சி முறையிலும் சொர்க்கவாசல் திறப்பு அன்று, 1,200 காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

 

சொர்க்கவாசல் திறப்பைக் காண முக்கியப் பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள், காவல் துறைக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், காவல்துறை துணை ஆணையர்கள் பவன்குமார், வேதரத்தினம் மற்றும் கோவில் நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்