No one has the authority to interfere in the matter of Natarajar temple

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் கருவறைக்கு முன்பு உள்ள கனகசபையில் வழிபடச் சென்ற கணேஷ் தீட்சிதரைக் கோவிலில் இருந்த தீட்சிதர்கள் ராஜா செல்வம், சிவசெல்வம், சபேசன் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலில் உள்ள ஐயப்பன் தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் கணேஷ் தீட்சிதர் கோவில் கட்டுப்பாடுகளை மீறியதால் அவரைப் பூஜையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கனகசபையில் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறினார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தீட்சிதர்கள் அல்லாத பக்தர்களைக் கரோனாவால் அனுமதிப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது உண்மை தான். கோவில் நிர்வாகம் சட்டப்படி செயல்படுவதாகவும் கோவில் பூஜை விஷயத்தில் யாருக்கும் தலையிட அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ளது போல் பக்தர்களைக் கனகசபையில் ஏற்றி வழிபடவைப்பது குறித்து நடராஜர் தான் முடிவு செய்வார். அதுவரை கோவில் கனகசபையில் ஏறி வழிபடத் தீட்சிதர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றனர்.

Advertisment

அதேபோல் கணேஷ் தீட்சிதர் மகன் தர்சன் (எ) நடராஜ தீட்சிதர் மீது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்த பெண் பக்தரைத் தாக்கியதாக வழக்கு உள்ளது. இதனால் அவரைக் கோவில் பூஜையிலிருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்தோம். இதனால் அவர் கோவிலுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். அவர் கூறியது உண்மைக்குப் புறம்பானது. கோவில் அனைவருக்கும் சமமானது என்றனர்.

இதற்கிடையில் கோவில் கனகசபையில் தரிசனம் செய்ய கணேஷ் தீட்சிதர் மற்றும் அவரது மகன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் இவரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர் சிறிது நேரத்திற்கு கீழே அமர்ந்து சபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூச்சலிட்டார். பிறகு இருவரும் வெளியே சென்றுவிட்டனர்.

No one has the authority to interfere in the matter of Natarajar temple

Advertisment

இதுகுறித்து கணேஷ் தீட்சிதரின் மகன் நடராஜ தீட்சிதர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் எப்படி சாமி தரிசனம் செய்கிறார்களோ அதே போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும். தற்போது கோவிலில் நடைபெறும் சில அநியாயங்களை அப்பாவும், நானும் தட்டி கேட்பதால் எங்களைக் கோவில் நிர்வாகம் மிரட்டித் தாக்குகிறார்கள். பொதுமக்களைக் கனகசபை ஏற்றக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மன்னர் கட்டிய கோவிலில் தீர்மானம் நிறைவேற்ற இவர்கள் யார்? தீட்சிதர்கள் அல்லாதவர்கள் கனகசபை ஏறினால் கவுச்சி அடிக்கிறது என்றும் இனிவரும் காலங்களில் தீட்சிதர்கள் அல்லாதவர்களைச் சபையில் ஏற்ற கூடாது என்றும் கூறுகிறார்கள்.

காலம் காலமாகக் கனகசபையில் ஏறிப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தது போல் இனியும் நடைபெற வேண்டும். கோவிலில் தரிசனம் மற்றும் கோடி அர்ச்சனை, மகா அபிஷேகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். அப்போதெல்லாம் கரோனா வராதா? இதற்குச் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்மீது திருட்டு வழக்கு உள்ளதாகச் சிலர் பொய்களைக் கூறிவருகிறார்கள். இது தவறானது கண்டிக்கத்தக்கது” எனக்கூறினார்.