Skip to main content

சுங்கச்சாவடிக் கட்டமைப்பையே தூக்கிவிடு; கட்டணத்தைக் கூட்டுவதை விட்டுவிடு: வேல்முருகன் மீண்டும் எச்சரிக்கை

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
toll plaza



கொலை செய்தலைப் போல் கொள்ளையடித்தலும் மானுடத்துக்கெதிரான மகா குற்றமேயாகும்! கொள்ளைக்கான சுங்கச்சாவடிகள், அரசே மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்! சுங்கச்சாவடிக் கட்டமைப்பையே தூக்கிவிடு; கட்டணத்தைக் கூட்டுவதை விட்டுவிடு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் எச்சரிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 43 சுங்கச்சாவடிகளில் 14ல் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த உயர்வு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.5 வரை இருக்கும்.
 

 

 

கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள்: 1. நல்லூர் (சென்னை- தடாசாலை), 2. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), 3.எலியார்பத்தி (மதுரை- தூத்துக்குடி), 4. கொடைரோடு (திண்டுக்கல்- சமயநல்லூர்), 5. மேட்டுப்பட்டி (சேலம்- உளுந்தூர்பேட்டை), 6. மன்வாசி (திருச்சி-கரூர்), 7. விக்கிரவாண்டி (திண்டி வனம்- உளுந்தூர்பேட்டை). 8. பொன்னம்பலம்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), 9. நந்தக்கரை(சேலம்-உளுந்தூர் பேட்டை), 10. புதூர் பாண்டியபுரம் (மதுரை- தூத்துக்குடி), 11. திருமந்துரை (ஊளுந்துர்பேட்டை- பாடலூர்), 12. வாழவந்தான் கோட்டை (தஞ்சை- திருச்சி), 13. வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), 14. விஜயமங்கலம் (குமார பாளையம்- செங்கம் பள்ளி).
 

 இந்தக் கட்டண உயர்வைப் பொறுத்தவரை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இனி கார்களுக்கு ரூ.80, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.75 அழ வேண்டும்; இது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.10 கூடுதல். பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடியில் கிலோமீட்டருக்கு ரூ.2.10 கூடுதல். இந்த விகிதங்களுக்குள் மற்ற 12 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 

2009ல் கிலோமீட்டருக்கு 40 பைசாவாக இருந்த கட்டணம்தான் இப்போது ரூ.2.10 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 

சரி, உயர்த்தப்பட்ட அளவில்தான் கட்டணம் வசூலிக்கப்படுமா என்றால், அதுவும் சுங்கச்சாவடிகள் நினைக்கிறபடிதான்.
 

250 சதவீதம் கட்டணம் உயர்ந்தது மட்டுமல்ல; இன்று வாகனங்களின் எண்ணிக்கையும் அந்த அளவுக்குக் கூடியிருக்கிறது. அதனால் சுங்கச்சாவடி வசூல் பல நூறு மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படியிருக்கும்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமென்ன? நியாயமாகப் பார்த்தால், கட்டணத்தைக் குறைக்கத்தான் செய்திருக்க வேண்டும்.
 

 

 

இந்தச் சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதற்காக மட்டும்தானா அமைக்கப்பட்டன? கிடையாது. சாலைக் கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பதுதான் சுங்கச்சாவடி அமைப்பதன் நோக்கம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டதுமில்லை; பராமரிக்கப்படுவதுமில்லை.
 

ஒரு சுங்கச்சாவடியில் தினமும் 10 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் வாகனங்கள் வரை செல்லும்; ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.21 லட்சம் வரை வசூலாகும்; அதில் தினமும் ரூ.2 லட்சத்தை எடுத்து சாலை மற்றும் சுங்கச்சாவடியை பராமரிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன்படி சாலை பராமரிக்கப்படுவதில்லை என்பது கூட இருக்கட்டும்; சுங்கச்சாவடியாவது பராமரிக்கப்படுகிறதா?
 

சுங்கச்சாவடிகளில் முதலில் கழிப்பிடம் இருக்க வேண்டும்; தீயணைப்பு சேவை இருக்க வேண்டும்; மருத்துவ ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும்; ஒரு டாக்டராவது இருக்க வேண்டும்; ஒரு நர்சாவது இருக்க வேண்டும்; ஆனால் எதுவுமே கிடையாது என்பதுதானே உண்மை!
 

ஆனால் ஒரு நாளுக்கு, ஆளுக்கு 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்து 50 அடியாட்கள் வரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்; கேட்கிற காசை கொடுக்காமல் யாரும் கேள்வி கேட்டால் அவர்களை அடித்துப் படியவைக்கத்தான் இந்த அடியாட்கள்!
 

மேலும், டெண்டர் முடிந்த பிறகும் தொடரும் சுங்கச்சாவடிகள், போட்ட முதலை விட 1000 மடங்குக்கு மேல் எடுத்த பிறகும் தொடரும் சுங்கச்சாவடிகள் என பல பிரச்சனைகள் உள்ளன. இப்படித் தொடர்வதற்குக் காரணமே, கொள்ளயடிக்கப்படும் பணத்தில் ஆள்வோர் வரைக்கும் பங்கு போவதுதான்.
 

 

 

இப்படித் தனி ஒரு ராஜாங்கமாக வழிப்பறிக்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகள் இருக்கலாமா? இவற்றை அகற்றும் வரை இவற்றுக்கெதிரான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டம் ஓயாது.
 

கொலை செய்தலைப் போல் கொள்ளையடித்தலும் மானுடத்துக்கெதிரான மகா குற்றமேயாகும்!
 

கொள்ளைக்கான சுங்கச்சாவடிகள், அரசே மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!
 

சுங்கச்சாவடிக் கட்டமைப்பையே தூக்கிவிடு; கட்டணத்தைக் கூட்டுவதை விட்டுவிடு என மீண்டும் எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்