Advertisment

பள்ளிகளில் இனி அச்சிட்ட வருகை பதிவேட்டிற்கு வேலை இல்லை.... இனி எல்லாமே 'ஆப்' தான்; ஆக. 1 முதல் நடைமுறை!! 

No more printed attendance registers in schools....everything is 'App'! Aug. 1st Practice!!

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை விவரங்கள் அச்சிட்ட வருகைப் பதிவேடு புத்தகம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல், செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisment

அதில் கூறியுள்ளதாவது, மாணவர்களின் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்து, அவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். 2023- 2024ம் கல்வி ஆண்டிற்கான நலத்திட்டங்கள் வழங்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டும்.

முதல்வரின் அறிவிப்புகளை முறையாக செயல்படுத்தவும், திட்டங்கள் உரிய நேரத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.அரசு தொடக்க மற்றும் நர்சரி பள்ளிகளின் நிலைமைகளைக் கண்டறிந்து, குறைபாடுகள் இருப்பின் அதனை சரி செய்யும் வகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மாதிரி பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டுமுதல் அந்தந்த தலைமை ஆசிரியரே நிர்வாக அதிகாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து வீட்டுப்பாடம் கொடுப்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் கூட மாற்றுப்பணி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.துவக்க அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஏதேனும் ஒரு வகுப்பிற்கு பாடம் கற்பிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளி தொடர்ந்து நடைபெற்று வரும்போது பள்ளிக்கோ, குறிப்பிட்ட வகுப்பிற்கோ இடையில் விடுமுறை அளிக்கக் கூடாது.

கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியின்றி விடுமுறை அளித்தல் கூடாது. ஆசிரியர்கள் தொடர் விடுப்பில் இருக்கும்போது கற்பித்தல், கற்றல் தடைபடாமல் இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியரோ தொடர் சிறப்பு வகுப்புகளை நடத்த அறிவுறுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப் பதிவினை செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க tnsed_school செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்களை தேவைப்படும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக வரும் 15 தேதிக்குள் வழங்க வேண்டும்.

நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தொழிற்கல்வி பாடப்புத்தகங்கள் பெற்று வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை குறைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து வகை மன்றச் செயல்பாடுகளும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3வது வாரம் மன்ற செயல்பாடுகளின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ஓவிய ஆசிரியர்களுக்கு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக 'எமிஸ்' தளத்தில் பதிவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இணை இயக்குநர்கள் அனுமதியின்றி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் எந்தவித மாறுதலும் வழங்கக் கூடாது.

தொழில்கல்வி பிரிவு அனுமதியின்றி வகுப்புகள் செயல்படக் கூடாது. அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சிவகங்கை, விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

teachers schools Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe