ஊதியம் வழங்க பணமில்லை: வேலை உறுதி-திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்!-ராமதாஸ் கோரிக்கை

No money to pay: Extra funding for the job guarantee scheme! -Ramadas demand

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே தீர்ந்து விட்டதாகவும், இதுவரை பணியாற்றிய ஏழை மக்களுக்கு இன்னும் ரூ.8,686 கோடி வழங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிப்பதாகபாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2021&22 ஆம் ஆண்டில் ரூ. 73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 7 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு மாதத்திற்கு முன்பே தீர்ந்து விட்டது. இன்றைய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதியில்லை. அதிலும் குறிப்பாக இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாடு அரசு ரூ.1,999 கோடியையும், ஆந்திர மாநில அரசு ரூ.2,323 கோடியையும் கூடுதலாக செலவழித்திருக்கின்றன.

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தாலும் அது எவ்வளவு நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. அது இனிவரும் காலத்திற்கு போதுமானதாக இருந்தாலும் கூட, நவம்பர் 29&ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் துணை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று தான் அந்த நிதியை மாநிலங்களுக்கு வழங்க முடியும் என்பதால் குறைந்தது அடுத்த 45 நாட்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் நிலைமை இன்னும் சிக்கலாகியுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துக் குடும்பங்களுக்கும் நடப்பாண்டில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆகவும், நாள் ஊதியத்தை 273 ரூபாயிலிருந்து ரூ.300 ஆகவும் உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும். ஆனால், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட, ரூ.1999 கோடியை தமிழக அரசு கூடுதலாக செலவழித்துள்ளது. மத்திய அரசு கூடுதலாக வழங்கவிருக்கும் நிதி, தமிழக அரசு ஏற்கனவே செலவழித்த தொகையை ஈடு செய்யவே போதுமானதாக இருக்குமா? என்பது தெரியாத நிலையில், மீதமுள்ள 5 மாதங்களுக்கு இத்திட்டத்தை தமிழக அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 33.36 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 50 வேலை நாட்களில் மூன்றில் இரு பங்கு மட்டும் தான். மேலும் தமிழ்நாட்டில் 92.31 லட்சம் குடும்பங்கள் வேலை கேட்டு பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 63.35 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுவும் மூன்றில் இரு பங்கு மட்டும் தான். விண்ணப்பித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்றால் இப்போது செலவழித்திருப்பதை விட இன்னும் 7 மடங்கு நிதி தேவை.

ஆனால், இப்போதே ஓராண்டுக்கான நிதியை கூடுதலாக செலவழித்து விட்ட நிலையில், இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பது தமிழக அரசால் சாத்தியமல்ல. ஒவ்வொரு மாநில அரசின் நிதிநிலையும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் உள்ளன. அதனால், மத்திய அரசு உடனடியாக மாநில அரசுகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு நிதி ஒதுக்காவிட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பான்மையான மாநிலங்களில் ஊரக வேலை உறுதித் திட்டம் முடங்கி விடும். ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் கூட, ஊரகப்பகுதிகளில் பெரும்பான்மையான குடும்பங்களின் வயிற்றுப் பசியையும், அடிப்படைத் தேவைகளும் தீர்க்கிறது. இத்தகைய சூழலில் ஊரக வேலைத் திட்டம் முடங்கினால் அது சமூக அமைதியையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

எனவே, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மத்திய அரசு நிதி ஒதுக்கும் வரை மாநில அரசுகள், அவற்றின் சொந்த நிதியைக் கொண்டு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்துக் குடும்பங்களும் தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வசதியாக, இதுவரை நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும்'எனக்கூறியுள்ளார்.

Central Government pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe