Skip to main content

“எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவராயினும் உடன்பிறப்பென்ற உணர்வு வேண்டும்” - தொல். திருமாவளவன்

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

"No matter what caste and religion you are born in, you and I should feel that we are born together" Thol. Thirumavalavan

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமத்துவம் உள்ள சமூகமாக இருக்க வேண்டுமானால் பிறப்பின் அடிப்படையில் கல்வி, வேலை, அதிகாரம் போன்றவை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். இந்தக் கோட்பாடுதான் சமூக நீதிக் கோட்பாடு என சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பேசினார்.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர். அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பேசினார். அவர் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு தினத்தை அறிவார்ந்த சான்றோர், மாணவச் செல்வங்கள், ஜனநாயக சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் இந்த நாளை மையமாக வைத்து பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவச் செல்வங்களுக்கு பரிசுகளை வழங்குகிற அளவுக்கு இது நினைவு கூறப்படுகிறது.

 

ஒரு புதிய இந்தியாவை கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம்தான். ஆகவே இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள் என்பது ஒரு பொன்னான நாள் ஆகும். புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் சாசன உறுப்பினராக தேர்வு பெற்று அரசியல் நிர்ணய சபைக்குப் போகிறார்.  அதன் பிறகு அந்த நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத் அரசமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக அம்பேத்கரை தேர்வு செய்கிறார்.

 

நாட்டை வழி நடத்துவதற்குரிய கோட்பாட்டைக் கொண்டதாக இந்த அரசியல் அமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  பல்வேறு கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழும் நாடு. பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள், பல்வேறு வகையான கருத்தியலை ஏற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர்கள், இவர்கள் அனைவரையும் உடன் பிறப்பு உணர்வோடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு இருக்கிறது.  

 

எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதங்களைப் பின்பற்றினாலும் நீயும் நானும் உடன்பிறப்புதான் என்கிற உணர்வு நமக்குள் வரவேண்டும். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அந்த அடிப்படை கோட்பாடு, அடிப்படை கூறுகள் என்பது சிதைந்து போகக்கூடாது என்பதுதான் சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் நோக்கம் என்பதை நாம் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். சமத்துவம் உள்ள சமூகமாக இருக்க வேண்டுமானால் பிறப்பின் அடிப்படையில் கல்வி, வேலை,அதிகாரம் யாவும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்கிற கோட்பாடுதான் சமூகநீதி கோட்பாடு” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ,  பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், எஸ்.ஆர்.எம் சட்ட பள்ளி பேராசிரியர் வின்சன் காம்ராஜ், இந்திய மொழிப்புல முதல்வர் முத்து ராமன் ஆகியோர் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசினர். 

 

முன்னதாக அரசியல் அமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இதனையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. பேராசிரியர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.