Skip to main content

''எந்த கட்சி எவ்வளவு கொடுத்தாலும் எடுபடாது... 2026ல் பாமக ஆட்சிதான்''-அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

pmk

 

கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு பேசுகையில், ''கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளாக வந்திருக்கும் எனது தம்பிகளே, தங்கைகளே, தாய்மார்களே, அண்ணன்களே, இந்த பொதுக்குழு வாயிலாக சிறு இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு முன்பு பேசிய மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேசியது போல தமிழ்நாடு முழுவதும் மக்கள் பாமக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக வைத்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில்  நீங்கள் களத்தில் இறங்கி செயல்பட்டால்தான் இன்னும் 4 ஆண்டு காலத்தில் பாமக ஆட்சி நடக்கும். நமக்கு நேரம் வந்து விட்டது. எல்லா செயல் திட்டமும் நம்மிடம் உள்ளது. இந்திய அளவில் 20 ஆண்டுகாலமான நிழல் நிதிநிலை அறிக்கையை  வெளியிட்ட ஒரு கட்சி பாமக தான். மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அரை நூற்றாண்டாக இவங்க, அவங்க தான் வந்தனர். நாம் வர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒருமுறை பாமகவுக்கு ஓட்டு போடலாம் என்ற எண்ணம் வந்துள்ளது. எந்த பிரச்சனை இருந்தாலும் அவர்கள் (பாமகவினர்) போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், களத்தில் இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ணுகின்றனர். 2026 ல் எந்த கட்சி எவ்வளவு கொடுத்தாலும் அது எடுபடாது. மக்கள் நமக்கு தான் ஓட்டு போடுவார்கள். இந்த மனநிலையில் மக்கள் உள்ளனர். தைரியமாக களத்தில் இறங்குங்கள். திமுக, அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் மதுவிலக்கு எப்பொழுது கொண்டு வர போறீங்க என்று பாமக கேட்கிறார்கள் என்று கேட்டதற்கு அவங்க ஆட்சியில் செய்வாங்க என்று கூறியுள்ளார்.

 

அவர் வாக்கு பலிக்கும். நம் ஆட்சியில் நாம் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குத்தான். மதுவிலக்கை அமல்படுத்த வில்லை என்றால் அடுத்த தலைமுறை என்று ஒன்றை பார்க்க முடியாது. அடுத்த தலைமை முறையைக் காப்பாற்ற வேண்டும். மக்கள் மனதில் நம்பிக்கை உருவாக்க வேண்டும். ஸ்டாலின் தேர்தலுக்கு  முன்பு மதுவிலக்கு என்று சொன்னார். ஆட்சிக்கு வந்த ஒரு கடையைக் கூட மூடவில்லை. கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்துவது நமது கடமை. பள்ளி மாணவிகள் மது அருந்தும் நிலை தமிழகத்தில் உள்ளது. மற்ற கட்சிகள் இதை செய்ய மாட்டார்கள். நாம் இல்லை என்றால் இப்பகுதி பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக மாறி இருக்கும். நாம் ஊர், ஊராக சென்று போராட்டம் நடத்தினோம். துண்டு பிரசுரம் கொடுத்தோம். இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும். நாம் தான் பாதுகாவலர்கள். இது சோறு போடும் மண். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டி முதன் முதல் குரல் கொடுத்தது பாமகதான்.

 

பாமக தமிழ்நாட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. நான் மிகப்பெரிய சாதனையாக பார்ப்பது காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தான். இதை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். கடல் நீர் உள்ளே வந்துள்ளது. கிராமம் கிராமமாகச் சென்று இதை சொல்ல வேண்டும். தையரியமாக செய்யுங்கள். இது நமது வேலை திட்டங்கள். நாம் புதிய யுத்தியைக் கையாண்டுள்ளோம்,புதிய வியூகங்கள் 'பிஎம்கே 2.0' ஐ தொடங்கியுள்ளோம். 2016 மாற்றம் முன்னேற்றம் அன்புமணி  என்று பார்த்ததை விட 20 மடக்கு அதிமாக இருக்கும் நாம் செய்யும் திட்டங்கள். இதை மனதில் வைத்து தைரியமாகக் களத்தில் இறங்குங்கள். நமக்கு நல்ல அரசியல் சூழல் உள்ளது. மக்கள் 2 கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். நாம் இந்த இடத்தை பிடிக்க வில்லை என்றால் யாராவது பிடித்து விடுவார்கள். நமக்கு இருப்பது 4 ஆண்டு ஆண்டுகள்.  இந்த அரசியல் காலம் முன்பு இல்லை, இதுபோல அரசியல் களம் இனிமேல் வராது. 4 ஆண்டுகள் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி மக்கள் நம்பிக்கை பெற்று தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். இதன் அடித்தளம் தான் இந்த பொதுக்குழு'' என்றார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ''காலநிலை மாற்றத்துக்குத் தமிழக அரசு செயல் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கட்டணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தருமபுரம் பட்டினப்பிரவேசம் போன்ற  கலாச்சாரம், பண்பாடு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கக் கூடாது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்