
கரோனா நோய் தொற்று தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் தொடர்ந்து அரசும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் கட்டாயம் என்பதை வலியுறுத்தி வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு மத்திய அரசு அபராத தொகையாக 500 ரூபாய் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்திய நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரின் மூலம் அபராத தொகை வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் பயணிகள் முகக்கவசங்கள் அணியாமல் இருந்தால் உடனடியாக பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்திற்குள் வந்தால் அங்குள்ள டிக்கெட் பரிசோதகர்களோ, ரயில்வே பாதுகாப்பு படையினரோ, ரயில்வே காவல்துறையினரோ அபராதம் விதிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் திருச்சியில் மட்டும் 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.