Advertisment

“பாதயாத்திரை பக்தர்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை” - கவலையில் முருக பக்தர்கள்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பழனி முருகனைத் தரிசிக்க, பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வரும் 18ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் உள்ள தேவகோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, மதுரை, தேனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முருக பக்தர்கள், பாதயாத்திரையாகச் சென்று முருகனைத் தரிசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், கரோனா, ஒமிக்ரான் நோய் தொற்று திடீரென அதிகரிக்க, அதனைக் கட்டுபடுத்தும் விதமாக, தமிழக அரசு வாரத்தில் கடைசி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தடை விதித்துள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் முருக பக்தர்கள், முருகனைத் தரிசிக்க பாதயாத்திரையாக வருகிறார்கள். இப்படி வரக்கூடிய முருக பக்தர்கள், இந்த வாரத்தில் மூன்று நாட்களில் முருகனைத் தரிசிக்க முடியாததால் அடிவாரத்தை மட்டும் சுற்றிவிட்டு முருகன் தரிசித்த நினைப்போடு மீண்டும் ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால் மற்ற நாட்களில் வரக்கூடிய முருக பக்தர்கள் எப்பொழுதும் போல் முருகனைத் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள்.

Advertisment

இது சம்பந்தமாக காளையார்கோவில், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம் ஆகிய பகுதியில் இருந்து முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த முருகபக்தர்களிடம் கேட்ட போது, “தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வருடந்தோறும் முருகனைத் தரிசிக்க பாதயாத்திரையாக வருவது வழக்கம். எங்க ஊரில் இருந்து பழனி வரை 250 கிலோ மீட்டர் இருப்பதால் ஐந்து நாள் கணக்கு போட்டு முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வருவது வழக்கம். அப்படி வரும்போது, எங்களுக்கு அங்கங்கே பொது மக்கள் அன்னதானமும் வழங்குவார்கள். ஆனால், இந்த வருடம் கரோனா பீதியால் நாங்கள் வரும் பகுதிகளில் அன்னதானமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளதால், ஹோட்டல்கள் வழி நெடுகிலும் சரிவரத் திறக்காததால் சாப்பாடும் கிடைக்கவில்லை. டீ, காபியும் குடிக்க முடியவில்லை. அதனால் கையிலிருந்த பிஸ்கட்டையும் தண்ணீர் குடித்துக் கொண்டும் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறோம். அந்தத் தண்ணீரைக்கூட காசு கொடுத்து வாங்கி வருகிறோமே தவிர முருக பக்தர்களுக்காக தண்ணீர் வசதிகள் கூட இல்லை. அரசு இதனை கவனத்தில் கொண்டு தண்ணீர் வசதி செய்துதர வேண்டும். அதுபோல் இந்த ஆண்டு எங்க ஊர்ல இருந்து திண்டுக்கல் வரை சாலைகள் விரிவுபடுத்தி வருவதால் ரோட்டோரங்களில் முருக பக்தர்கள் நடப்பதே கஷ்டமாக இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனிவரை பாதயாத்திரை பக்தர்களுக்கு நடைபாதை இருப்பதால் நடந்து செல்வது எளிதாக இருக்கிறது. இதன் மூலம் இன்னும் இரண்டு நாட்களில் முருகனை தரிசித்து விட்டு மீண்டும் ஊர் திரும்புவோம்” என்று கூறினார்கள்.

pazhani temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe