ADVERTISEMENT

தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது: சபாநாயகர் தரப்பு வாதம்!

10:05 PM Jul 25, 2018 | Anonymous (not verified)


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். மூன்றாவது நாளாக இன்று சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆரியமா சுந்தரம் தனது வாதத்தை தொடங்கியுள்ளார்.

அந்த வாதத்தில் "கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது அது கட்சியை விட்டு வெளியேறியதாக தான் எடுத்துக் கொள்ள முடியும். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்று கொண்டதாகவே கருத முடியும்.

18 எம்.எல்.ஏக்கள் தனி நபர் மீது புகார் அளிக்கவில்லை. அதிமுக உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை கொண்ட முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். முதல்வருக்கு எதிராக ஆளுநரால் நடவடிக்கை எடுக்க முடியாது என டிடிவி தரப்பிற்கு தெரியும். ஆளுநருக்கு அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே உள்ளது. அவரிடம் அரசியல் சாசன கடமையை ஆற்றுங்கள் என கூறுவது ஆட்சியை கலைப்பதற்காக அளித்த புகாராகவே கருத முடியும் என்றும் வாதிட்டார்.

மதியம் நடந்த விசாரணையில், சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என வாதிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும் எனவும் அரியமா சுந்தரம் தெளிவுபடுத்தினார்.

முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் இருக்கும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர் நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு நீதிபதி சத்தியநாராயணன் தள்ளிவைத்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT