Skip to main content

“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை” - அமைச்சர் சிவசங்கர்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

No complaint has been received about omni buses charging too much  Minister Sivashankar

 

இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகையொட்டி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று (09.10.2023) 2734 பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 700 பேர் பயணம் செய்து சொந்த ஊர் சென்றுள்ளனர். அதே போல் இன்றைக்கு இதுவரை 1442 பேருந்துகள் இயக்கப்பட்டு 68 ஆயிரத்து 910 பேர் பயணம் செய்துள்ளனர். இன்றைக்கு மொத்தமாக 3200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

 

தீபாவளியின் போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவிலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பான முறையில் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து முன்பதிவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.