
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (09.03.2021) இரவு விடியவிடிய நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் அதிமுக வலிமையுடன் இருப்பதாக கருதும் தொகுதிகளை, பாஜக உட்பட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியது, கோவை தெற்குத் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியது போன்றவற்றைக் கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாம்பன் ராமநாதபுரம் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் நிர்வாகி ஒருவர் தரையில் உருண்டு புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.