NLC resumed expansion work Company

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள்நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

Advertisment

என்.எல்.சி. நிறுவனம் சார்பாக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்துக் கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். இருப்பினும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இருப்பினும் அதற்குண்டான இழப்பீட்டையும் வழங்குவோம் என விவசாயிகளுக்குத் தெரிவித்துள்ளோம். வேளாண்மைத் துறை அமைச்சர் நேற்று என்.எல்.சி நிறுவன மேலாண் இயக்குநரை நேரடியாகச் சந்தித்து ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு குறைவாக உள்ளது, எனவே அதனை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அதற்கான இழப்பீட்டையும் அதிகரித்து அறிவித்துள்ளோம். சுமார் 264 ஹெக்டேர் நிலத்திற்கு அதிகமான கருணைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வழங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து நேற்று பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி, என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது அவரைக் கைது செய்த காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கிருந்த பாமகவினர் அன்புமணி இருந்த பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் தடுப்புகளை மீறி போலீசார் மீது பாமகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தக் கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினருக்குப் படுகாயம் ஏற்பட்டதால் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூரில் ஒரு தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட நிலையில், அன்புமணி கைதைக் கண்டித்து பல இடங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் உட்படக் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கலவரம் நிகழ்ந்த இடத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வன்முறையில் ஈடுபட்ட பாமகவைச் சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 28 பேரும் நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வளையமாதேவியில் விளைநிலங்களை அழித்து மீண்டும் கால்வாய்க் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை என்.எல்.சி. நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. மேலும் கால்வாய் மீதான பாலத்தின் மீது மண்ணை நிரப்பி சாலை பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறாத நிலையில் இன்று மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.