
என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த ஜூலை 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
அதே நேரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி முதல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒன்பதாவதுநாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு கடிதம் ஒன்றை நேற்று கொடுத்தது. அதில் போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் வைத்திருந்தது.

இந்நிலையில், என்.எல்.சி முன்புபோராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என என்.எல்.சி தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்புவிசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் சார்பில் முதலில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் எனத்தெரிவித்தனர். என்எல்சி தரப்பில், 'குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அலுவலகம் எனும் தலைமை அலுவலகத்தின் முன்பே முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது' என்ற வாதத்தை வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப் படாத இடத்தில், அதுவும் என்.எல்.சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கடலூர் காவல்துறை எஸ்.பி நிர்ணயிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச்செயல்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்' என்று காவல்துறைக்குஉத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)