nlc neyveli - bihar workers -

Advertisment

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலைய (என்.என்.டி.பி) கட்டுமான பணியினை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த தனியார் ஒப்பந்த நிறுவனங்களில் 433 வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கால் வேலையும், கூலியுமின்றி தவித்து வருகின்றனர்.

அதனால் தங்கள் மாநிலமான பீகாருக்கு தங்களைஅனுப்பி வைக்கக்கோரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய அனல்மின்நிலையம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து காவல்துறையும், என்.எல்.சி நிர்வாகமும் அவர்களை சமாதான படுத்தியநிலையில், இரண்டு தினங்களில் தங்களை தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவில்லையென்றால் நாங்கள் நடைபயணமாகவே கிளம்பி விடுவோம் என்று எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களை அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொறுமையிழந்த வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை மூட்டை முடிச்சுகளுடன் பீகார் மாநிலத்திற்கு நடைபயணமாகவே கிளம்பிய நிலையில், நெய்வேலி வட்டம் 24 சர்ச் அருகில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் வருகின்ற 16 ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து பீகார் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும், என்எல்சி நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரும், என்.எல்.சி அதிகாரிகளும் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.