/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_440.jpg)
என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த 10 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் ஏற்கனவே நிலத்தை ஒப்படைத்து ரூபாய் 6 லட்சம் இழப்பீடு பெற்றுக் கொண்டவர்களில் 7 பேருக்கு ஏக்கர் ஒன்றுக்கு கருணைத் தொகையாக தலா 3 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. என்.எல்.சி இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் முன்னிலை வகித்தார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை மற்றும் காசோலைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “என்.எல்.சிக்காக தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த போவதாக சொல்லப்படுகிறது. அது தவறானது. ஏற்கனவே 2006களில் கையகப்படுத்திய நிலங்களை தொடந்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் ஏற்கனவே 6 லட்சம் இழப்பீடுபெற்றவர்களுக்கு கூடுதலாக கருணைத் தொகையாக 3 லட்சம் வழங்கப்படுகிறது. தற்போது 2500 ஏக்கர் நிலம் தான் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள். இதற்கு தான் கூடுதல் இழப்பீடு கேட்கிறார்கள். அவர்களுக்கு திருப்தியுடன் வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படுகிறது. 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக என்.எல்.சி தெரிவித்துள்ளது. என்.எல்.சிக்கு புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இப்போது இல்லை" என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3681.jpg)
இதனிடையே என்.எல்.சிக்கு நிலம் கொடுப்பது தொடர்பாக சிதம்பரத்தில் விவசாயிகள் கருத்து கூட்டம் நடப்பதாக இருந்தது. இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்.எல்.சி தொடர்பான நிகழ்ச்சி நடப்பதாக கேள்விப்பட்டு, பா.ம.கவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் (மேட்டூர்), சிவக்குமார் (மயிலம்) மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், ஜெ.கார்த்திகேயன், செல்வ.மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து பேசினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1296.jpg)
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், சிவக்குமார் ஆகியோர், “என்.எல்.சிக்கு நிலம் கொடுப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதாக இருந்து. அதில் பங்கேற்பதற்காக வந்தோம். என்.எல்.சிக்கு புதிதாக நிலம் எதுவும் கையகப்படுத்தவில்லை என்று அமைச்சர் கூறினார். 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக கூறினோம். ஆனால் அவர் 2500 ஏக்கர் நிலம் தான் கையகப்படுத்த உள்ளது என்றார். ஆகவே இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். என்.எல்.சிக்காக ஒரு பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம். மீறி மூன்றாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தினால் 10,000 பேரை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.” என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)