Advertisment

என்.எல்.சி நில எடுப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு; கருப்பு பேட்ஜுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்! 

NLC land acquisition; Farmers who attended the meeting with black badge!

Advertisment

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் 400 பேர் ஒப்புக்கொண்டதாகக் கூறி என்.எல்.சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் உள்ள மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுத்தனர்.

அதில் 'நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக கிராம மக்கள் தங்களுடைய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறி என்.எல்.சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மதுவானமேடு, கரைமேடு, கோபாலபுரம், ஊ.ஆதனூர், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, சாத்தப்பாடி, கத்தாழை, கரிவெட்டி, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களுக்கு முறையான இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த விடுவோம்.

பெருவாரியான விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும் விவசாயிகளின் குறைகளை தீர்க்காமலும் எங்கள் நிலங்களை கையகப்படுத்தினால் இதனை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

NLC land acquisition; Farmers who attended the meeting with black badge!

இதனிடையே விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். வட்டாட்சியர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு விளக்கமளித்தனர்.விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்த முயல்வதை கண்டித்து விவசாயிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விருத்தாசலம் வட்டார விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தங்க.தனவேல், கந்தசாமி, கலியபெருமாள், குப்புசாமி, சுரேஷ், அலெக்ஸாண்டர் ஆகியோர் “என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மீது மிரட்டல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், நிலம் எடுக்கும் பணியை கைவிடக் கோரியும் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டோம். அதனால் என்.எல்.சி நிர்வாகத்திடம் கூறி நிலம் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாததால் மழைக் காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடுகிறது. அதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தார்ப்பாய் வசதி மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் மணிமுத்தாற்றில் தேங்கியுள்ள கழிவுநீரை தூய்மைப் படுத்துவதுடன் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி உரம் தயாரிப்பு கூடங்கள் பெருகி வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கைகள் விடுத்தனர்.

விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளித்து பேசிய வட்டாட்சியர் அந்தோணிராஜ், "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்ளுக்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

nlc Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe