Skip to main content

என்.எல்.சி நில எடுப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு; கருப்பு பேட்ஜுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள்! 

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

NLC land acquisition; Farmers who attended the meeting with black badge!

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் 400 பேர் ஒப்புக்கொண்டதாகக் கூறி என்.எல்.சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் உள்ள மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுத்தனர்.

 

அதில் 'நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக கிராம மக்கள் தங்களுடைய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறி என்.எல்.சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மதுவானமேடு, கரைமேடு, கோபாலபுரம், ஊ.ஆதனூர், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, சாத்தப்பாடி, கத்தாழை, கரிவெட்டி, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களுக்கு முறையான இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த விடுவோம்.  

 

பெருவாரியான விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும் விவசாயிகளின் குறைகளை தீர்க்காமலும் எங்கள் நிலங்களை கையகப்படுத்தினால் இதனை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 

 

NLC land acquisition; Farmers who attended the meeting with black badge!

 

 

இதனிடையே விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். வட்டாட்சியர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு விளக்கமளித்தனர். விருத்தாசலம்,  கம்மாபுரம் பகுதிகளில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்த முயல்வதை கண்டித்து விவசாயிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தில் பேசிய விருத்தாசலம் வட்டார விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தங்க.தனவேல், கந்தசாமி, கலியபெருமாள், குப்புசாமி, சுரேஷ், அலெக்ஸாண்டர் ஆகியோர் “என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மீது மிரட்டல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், நிலம் எடுக்கும் பணியை கைவிடக் கோரியும் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டோம். அதனால் என்.எல்.சி நிர்வாகத்திடம் கூறி நிலம் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாததால் மழைக் காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடுகிறது. அதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தார்ப்பாய் வசதி மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் மணிமுத்தாற்றில்  தேங்கியுள்ள கழிவுநீரை தூய்மைப் படுத்துவதுடன் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி உரம் தயாரிப்பு கூடங்கள் பெருகி வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கைகள் விடுத்தனர்.

 

விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளித்து பேசிய வட்டாட்சியர் அந்தோணிராஜ், "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்ளுக்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: ஆந்திர மாநில வாலிபர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
threat to girl: Andhra state youth arrested

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Bilateral Clash at Temple Festival

கடலூரில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவை நடத்துவதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோதல் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தக் காவல்துறையினர் இரு தரப்பு மோதலையும் சமாதானப்படுத்த முயன்ற நிலைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பை மீறி ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

கோவில் திருவிழாவில் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.