NLC Intcoserv - Contract Labor Demand Insist! Issuance of Notice!

Advertisment

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றிவருகின்றனர். பணி நிரந்தரம், சம வேலைக்குசம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல ஆண்டுகளாக போராடிவந்தனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் என்.எல்.சி நிர்வாகத்துடன் நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி ஒப்பந்த தொழிலாளர்களைப் படிப்படியாக சொசைட்டியில் சேர்ப்பது என்றும், சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களைப் படிப்படியாக பணி நிரந்தரம் செய்வது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதில் ஒரு பகுதியினர் மட்டும் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு பகுதியினர் மட்டும் சொசைட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட AMC/NonAMC தொழிலாளர்கள்,இறந்தவர்களின் வாரிசுகள், சூப்பர்வைசர்கள் ஆகியோரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

Advertisment

என்.எல்.சி, திமுக சங்கமான தொ.மு.சவின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு ஒப்பந்த தொழிலாளர் சங்கம், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், தமிழர் வாழ்வுரிமை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், விசிகவின் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்றுமுன்தினம் (06.07.2021) நெய்வேலி சி.ஐ.டி.யு அலுவலகத்தில் தொ.மு.ச தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

NLC Intcoserv - Contract Labor Demand Insist! Issuance of Notice!

இக்கூட்டத்தில் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட உத்தரவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டதில் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், 750 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள கோரிக்கைகளான 3000த்திற்கும் மேற்பட்ட பணிமூப்பு பட்டியலில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் உடனடியாக இணைப்பது;ஐந்து ஆண்டுகளைக் கணக்கிட்டுப் பதவி உயர்வு வழங்குதல்;விடுபட்ட 130 பேரை பணி நிரந்தரம் செய்தல்;2020 - 2021 ஆண்டுக்கான பணி நிரந்தரத்தை உடனடியாக வழங்க வேண்டும்;கரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலையும் இழப்பீடும் வழங்க வேண்டும்;வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்;சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட AMC, NON AMC தொழிலாளர்களை சீனியாரிட்டி பட்டியலில் இணைக்க வேண்டும்;அனைத்து தொழிலாளர்களுக்கும் என்.எல்.சி பொது மருத்துவமனையில் ஆரம்ப மருத்துவ சிகிச்சையும் நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் வெளி மருத்துவமனையில் உயர் சிகிச்சையும் வழங்க வேண்டும்;சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெற்ற ஒப்பந்த தொழிலாளர்களில் நியாயமான தொடர் விடுப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை இன்ட்கோசர்வ்வில் இணைக்க வேண்டும்;சர்வீஸ் வெயிட்டேஜை மாற்றியமைத்து புதிய ஆண்டைக் கணக்கிட்டுசர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும்;அனைத்து தொழிலாளர்களுக்கும் தைத்த 2 செட் சீருடைகளை விரைவில் வழங்க வேண்டும்;அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் வெளியில் விபத்தின் காரணமாகவோ அல்லது இயற்கை மரணம் நேரிட்டாலோ அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்;கரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை என்.எல்.சி நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண்பதற்காக என்‌.எல்.சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

Advertisment

இதனிடையே சொசைட்டி - ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. கரோனா பேரிடர் காலத்திலும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நெய்வேலி பெரியார் சதுக்கத்திலிருந்து, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புச் செயலாளர் எம். சேகர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று வேலைநிறுத்த அறிவிக்கை அளித்தனர்.

கூட்டமைப்பின் சார்பில் நாம் தமிழர் தொழிற்சங்கம்,மூவேந்தர் தொழிற்சங்கம், வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு நலச்சங்கம், சொசைட்டி தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆசிய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். "என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்"என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.