
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியம், வட்டம் 12 சரோஜினி நாயுடு சாலையைச் சேர்ந்தவர் உத்தண்டராயர் (51). இவர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் உள்ள முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஜெயசித்ரா (45). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 மகன்களும் வெளியூரில் கல்வி பயின்றுவருகின்றனர். உத்தண்டராயர் கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளார். அதையடுத்து புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். அதேசமயம், தனது மனைவியிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (02.08.2021) பணிக்குச் சென்று வீடு திரும்பிய உத்தண்டராயர், வீட்டிலிருந்த தனது மனைவி ஜெயசித்ராவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற உத்தண்டராயர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார். அதில், அவரது மனைவியின் இரண்டு கைகளும் துண்டாகி கீழே விழுந்தது. இதில் அலறிய ஜெயசித்ரா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். கைகளை வெட்டியபோது மனைவியிடம் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதனையடுத்து வீட்டில் உள்ள படுக்கை அறைக்குச் சென்று, கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த ஜெயசித்ரா சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே அலறியபடி ஓடி வந்துள்ளார். அதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சித்ராவை மீட்டு, அருகில் உள்ள என்.எல்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது உள்ளிட்ட போலீசார், தற்கொலை செய்துகொண்ட உத்தண்டராயர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட கணவன், மனைவியின் கைகளை வெட்டிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.