கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் - 4 என்.எல்.சி. குடியிருப்பில் வசித்துவருபவர் இளங்கோவன் (55). இவர், என்.எல்.சி. இரண்டாம் சுரங்கத்தில் சீனியர் டெக்னீசியனாகபணியாற்றிவருகிறார். நேற்று (15.12.2021) என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் இரவு பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது பணியின்போது திடீரென்று இளங்கோவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சக தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்தஇளங்கோவனின் உறவினர்கள், என்.எல்.சி. இரண்டாம் நிலக்கரிச் சுரங்கம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், உயிரிழந்த இளங்கோவனின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், உயிரிழந்த இளங்கோவனின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். என்.எல்.சி. உயரதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.