ADVERTISEMENT

"எங்களுக்கு இதுவரை விடியலே இல்லை" - முதல்வருக்கு தினமும் கடிதம் அனுப்பும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள்..!  

06:25 PM Jun 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறது. அதேசமயம், நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் 25 ஆண்டுகளாகக் கிடப்பிலேயே இருப்பதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

என்.எல்.சியில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'விடியலை நோக்கி' என்ற தலைப்பில் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடர்ந்து அச்சிட்ட கடிதங்களை அஞ்சல் மூலமாக அனுப்பி வருகின்றனர்.

"என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் விடியலை நோக்கி" என்ற தலைப்பிலான அந்தக் கடிதத்தில், "கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாகவும், சொசைட்டி தொழிலாளர்களாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றோம். எங்களில் பெரும்பாலானோர் நிறுவனத்திற்காக வீடு, நிலம் கொடுத்து, என்.எல்.சியில் அப்ரண்டிஸ் முடித்தவர்கள். நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலைகளைச் செய்யும் எங்களுக்கு நிரந்தர தொழிலாளர்கள் பணி கிடைக்கவில்லை. உலக விடியலுக்குச் சேவல் கோழிகளாகக் கூவினாலும் எங்களுக்கு விடியல் இல்லை.

மேலும், கரோனா தாக்குதலுக்கு பலரும் பலியாகி உயிர்களை இழக்கிறோம். தொழிலாளர்களை தாயுள்ளத்தோடு பாதுகாக்க வேண்டிய என்.எல்.சி நிர்வாகம் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. வேலை நிரந்தரம் இல்லை, நல்ல சம்பளம் இல்லை, இன்று உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.

கரோனா குறித்த மத்திய மாநில அரசுகளின், உலக சுகாதார அமைப்பின் உத்தரவுகள் இங்கே காற்றில் பறக்கிறது. நெய்வேலி இருப்பது தமிழ்நாட்டில்தானா? தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகத்தில் கீழா அல்லது வேறு ஒரு ஆட்சி நிர்வாகத்தின் கீழா என்கிற ஐயப்பாட்டில் வாழ்கிறோம்.

எனவே தாங்கள் உடனே தலையிட்டு, போர்க்கால நடவடிக்கை எடுத்து என்.எல்.சி நிறுவன உற்பத்திக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் இன்ட்கோசெர்வ் சொசைட்டி தொழிலாளர்கள், ஹவுஸிங்கோர்ஸ் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்காலம்' கானல் நீராகி' விடாமல், வாழ்வாதாரம் இழந்திட்ட என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட AMC/NonAMC, இறந்தவர்களின் வாரிசுகள், சூப்பர்வைசர்கள் இவர்களின் துயர்துடைப்பீர்கள், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்கள் என்ற நம்பிக்கையில் விடியலை நோக்கிக் காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், AMC/NonAMC தொழிலாளர்கள் தொடர்ந்து தினமும் அனுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT