/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3666.jpg)
நெய்வேலியில் உள்ள சுரங்கம்-1 அ பகுதியில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து, ‘எம்-சாண்ட்’ (M-Sand) எனப்படும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மணல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமானபிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.
நிலக்கரி அமைச்சகத்தின் பசுமை முன் முயற்சிகளுக்கு இணங்க, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், “கழிவிலிருந்து வளம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இது போன்ற, பசுமை முயற்சிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையானது, சுரங்கத்தில், மேல்மண் நீக்கத்தில் இருந்து பெறப்படும் மண்ணில் இருந்து, ஆண்டுக்கு 2.62 லட்சம் கன மீட்டர், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் தரமான ‘எம்சாண்ட்’ என்ற மணலை உற்பத்தி செய்யும். மேலும், வருகின்ற 2024 ஜனவரி மாத இறுதிக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், தற்போதைய அதிகபட்ச மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், இயற்கை வளமான மணல், அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது குறையும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள இதர சுரங்கங்களான, சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றிலும் இதே போன்று மற்றும் இதைவிட அதிகத் திறன் கொண்ட மணல் ஆலைகள், விரைவில் நிறுவப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர், இந்த ஆலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும், இது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், பசுமை முயற்சிகள் வருங்காலங்களில், நிறுவனத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் அவர்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)