Skip to main content

நடராஜர் கோவிலில் என்எல்சி சேர்மனிடம் பல லட்சங்களைப் பெற்று பூஜைகள்? நிர்வாகம் மறுப்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகத் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் கோவிலில் முக்கிய வழியாகக் கருதப்படும் கீழகோபுரத்தில் இருந்து செல்லும் 21 படிகட்டு வழியில் பக்தர்கள் செல்லும் பாதையை அடைத்து நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி குடும்பத்தினருக்கு, கோவில் தீட்சிதர்கள் பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ருத்ரா அபிஷேக பூஜைகள் செய்துள்ளனர். இது தினந்தோறும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில் இது குறித்து கோவில் தீட்சிதர்களிடம் விசாரித்த போது இதுபோன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்தான். நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் போது இந்த இடங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறும். சமீபத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு இதே போன்று அதே இடத்தில் ருத்ரா அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இது ஒன்றும் விதிமீறல் அல்ல, பூஜைக்கு உரிய பணத்தை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தினால், யாருக்கு வேண்டுமானாலும் இதே இடத்தில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் என்று கூறுகின்றனர்.

 

 NLC chairman received several lakhs and performed pooja Nataraja temple wrong

 

இதுகுறித்து என்எல்சி மக்கள் தொடர்பு அலுவலர் காதர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைக் கூறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபிறகு மகிழ்ச்சி அடைகிறார்கள். சேர்மன் கோவிலில் நடைபெற்ற ருத்ர அபிஷேக பூஜையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆனால் இவர் பணம் எதுவும் செலவு செய்யவில்லை. வேறு அமைப்பு இதனைச் செய்திருந்தார்கள். இதில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 

இவர் சேர்மன் என்பதால் வெளியில் தெரிகிறது. அங்கு மற்றவர்களும் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். எனவே திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புவதாகக் கூறினார். இவர் ஆன்மீக பக்தர் திருப்பதி உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு கோவிலுக்குச் செல்வார். என்எல்சி நிர்வாக சேர்மன் என்பதால் சிறப்பு செய்வார்கள். இதனை பிடிக்காதவர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.