Skip to main content

என்எல்சி விபத்து: ரூ 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை- மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் வலிறுத்தல்

 NLC accident; Rs 50 lakh compensation, permanent work for a family - K Balakrishnan

 

சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி புதன்கிழமை, 2-வது அனல் மின்நிலையத்தின் 5-வது யூனிட்டில் தீவிபத்து ஏற்பட்டு பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே இறந்துள்ளார்கள். 17-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சென்னைக்கு மேல் சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். அதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன் இதே இடத்தில் 6-வது யூனிட்டில் விபத்து ஏற்பட்டு 5-பேர் இறந்தனர். பல தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2019-ல் நடந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 5-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான இந்த நெய்வேலி என்எல்சி நிறுவனம் வருடத்திற்கு ரூ1200கோடி அளவுக்கு லாபம் தரக்கூடியது. இதில் அடுத்தடுத்து நடைபெறும் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது குறித்து நெய்வேலி நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை செய்ததில் நெய்வேலி நிறுவனத்திற்கு பாய்லரை திருச்சியில் உள்ள பொதுதுறை நிறுவனமான பெல் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த பாய்லர் பராமரிக்கும் பணியை அந்த நிறுவனத்திடம் கொடுப்பது இல்லை. இதற்கு மாறாக பாய்லர்களை பராமரிக்கும் பணியை தனியார் காண்ட்ராக்டர் வசம் ஒப்படைத்துள்ளனர். இது கையூட்டு வாங்கிகொண்டு, பணிகளை கொடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.  அவர்கள் சரியான முறையில் பாய்லர்களை பராமரிக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது. இது எதேச்சையாக நடந்த விபத்து இல்லை. நிர்வாகத்தின் கோளாறு காரணமாகவும், நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து விபத்து நடைபெற்று உயிர் பலி ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

இந்த விபத்தில் இறந்துபோன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ50 லட்சம் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ10 லட்சம் அவர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். இந்த விபத்து குறித்து ஒரு குழு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். மேலும் இது விபத்து நடந்தது என்று இழப்பீடு கொடுத்துவிட்டு சென்று விடாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

காவல்துறை எந்த அளவுக்கு அத்துமீறி நடந்து கொள்கிறது என்பதற்கு சத்தான்குளம் சம்பவம் நடைமுறை உதாரணம். அந்த சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பொறுப்புணர்வோடு ஒரு நீதிபதி காவல்நிலையத்தில் விசாரணையில் இருக்கும்போதே அங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் அங்குள்ள காவலர்களால் நிகழும்போது அது என்ன காவல் நிலையமா அல்லது சமூக விரோத கூடமா? என கேள்வி எழுப்பினார்.

தந்தை, மகன் கொலை விவகாரத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து கூறியிருப்பதால் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை,  கரோனா வைரஸ் ஊரடங்கு காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பார்த்திருக்கிறோம் அப்படி உள்ள காவல் துறையில்  இப்படி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில்  காவல்துறை உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். தமிழக முதல்வர், அமைச்சர் காப்பாற்றிவிடுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் நினைத்துள்ளனரா, இதற்கு தமிழக முதல்வர் சரியான பதிலை கூறவேண்டும்.

அதேபோல தமிழகத்தில் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணி செய்யும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டும் அவர்கள் தொடர்ந்து பணியில் உள்ளனர். அவர்கள் மீது பெரிய அளவில் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் பணியாற்ற அனுமதிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே தமிழக தலைமை காவல்துறை அதிகாரி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உடன் இருந்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்