Velmurugan

NLC 3ஆவது சுரங்கத்திக்கு நிலம் எடுப்பதை கைவிடக்கோரி விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெய்வேலி அனல் மின் திட்டத்திற்காக சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என ஏற்கனவே 3 நிலக்கரிச் சுரங்கங்களை என்எல்சி அமைத்துள்ளது. இதற்காக 45 ஊர்களில் நிலங்களை அது கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்குரிய இழப்பீட்டினை இன்றுவரை சரிவர வழங்கவில்லை. அறிவித்தபடி நிலத்தின் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. நிலம் எடுத்த அந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி, மின்சாரம், பள்ளி, கல்லூரி என எதையும் நிறைவேற்றவில்லை.

Advertisment

இந்நிலையில் இப்போது ஆவது சுரங்கம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது என்எல்சி. இதற்காக 24 ஊர்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு செயலில் இறங்கியுள்ளது என்எல்சி. அந்த நிலங்கள் அனைத்துமே விளைநிலங்களாகும்; விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளவையாகும்.

அந்த ஊர்களாவன: 1.ஊ.அகரம். 2.அரசக்குழி. 3.ஊ.கொளப்பாக்கம். 4.கோபாலபுரம். 5.குமாரமங்கலம். 6.கோ.ஆதனூர். 7.சு.கீணனூர். 8.கம்மாபுரம். 9.க.புத்தூர். 10.சிறுவரப்பூர். 11.சி.பெ.கோட்டுமுளை. 12.பெருந்துறை. 13.ஓட்டிமேடு. 14.பெருவரப்பூர். 15.சாத்தப்பாடி. 16.ஊ.ஆதனூர். 17.தர்மநல்லூர். 18.விளக்கப்பாடி. 19.மேல் மற்றும் கீழ் வளையமாதேவி. 20.அகர ஆலம்பாடி. 21.பு.ஆதனூர். 22.பெரிய மற்றும் சின்ன நற்குணம். 23.வீரமுடையாநத்தம். 24.எறும்பூர்.

ஏற்கனவே உள்ள 3 சுரங்கங்களின் நிலக்கரியே என்எல்சியின் தேவைக்கு அதிகமாகும். அந்த உபரி நிலக்கரியை பிற நிறுவனங்களுக்கு விற்று பெரும் பண லாபம் சம்பாதித்துவருகிறது என்எல்சி. மேலும், முந்தைய 3 சுரங்கங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் மேல் உபரி நிலம் உள்ளது. இந்த நிலங்களை இதுவரை பயன்படுத்தப்படுத்தவில்ல. அப்படியிருக்க 3ஆவது சுரங்கத்திற்கென நிலம் கையகப்படுத்துவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தேவைக்கும் அதிகமான நிலம் இருக்கும்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்துவது என்பது கார்ப்பொரேட்டுகள் வேலையாகவே மோடியின் இந்தியாவில் ஆக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் என்எல்சியும் செய்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் என்எல்சிக்குத் துணைபோவது நன்றாகத் தெரிகிறது. இது தமிழக அரசுக்குத் தெரியுமா தெரியாதா என்பதை தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக இந்த நிலம் கையகப்படுத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.

என்எல்சியைப் பொறுத்தவரை, ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக வழங்காதது மட்டுமல்ல; தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் தமிழகத்தை குறிப்பாக கடலூர் மாவட்டத்தைத் தாக்கியபோதெல்லாம் துரும்பைக் கூட கிள்ளிப்போட்டதில்லை என்எல்சி நிர்வாகம். இப்போது கஜா புயல் பாதிப்பிற்கும் கூட அதன் பங்களிப்பு எதுவுமில்லை.

எனவேதான் சொல்கிறோம்; விரிவாக்கம் என்ற பெயரில் 3ஆவது சுரங்கத்திற்கென நிலம் எடுப்பதை என்எல்சி கைவிட வேண்டும்; தமிழக அரசு அதற்குத் துணைபோகாது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காரியத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோக்க்கூடாது.

இதனை வலியுறுத்தி வரும் 24ந் தேதியன்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.