Skip to main content

நிர்மலா தேவி எங்கே போனார்? என்னவானார்? கடத்தப்பட்டாரா?- பேட்டியின் போது  பசும்பொன் பாண்டியன் கேள்வி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. 
 

வழக்கில் தொடர்புடையவர்கள் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. 
 

இதனைத் தொடர்ந்து அவருக்கான ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

pasumpon pandiyan and nirmala




கடந்த முறை நிர்மலாதேவி விசாரணைக்கு வந்தபோது மொட்டையடித்தபடி வந்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
 

நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை தொடர்பு கொண்டோம். 
 

நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லையே?
 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள வே முடியவில்லை. 


 

தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது ஆஜராவாரா? அதற்கு முன்பாகவே கோர்ட்டில் ஆஜராவாரா? 
 

எதுவும் தெரியவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதைக் கூட தெரிவிக்க முடியவில்லை. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. 
 

மிரட்டுகிறார் என்று உங்களுக்கு போனில் தகவல் சொன்னதாக தெரிவிக்கிறீர்கள். எப்படி மிரட்டுகிறார்கள் என்று சொன்னாரா?
 

டூவீலரில் வேகமாக இருவர் வருவார்களாம். பக்கத்தில் வந்து உன் பிள்ளையை ஒன்றுமில்லாமல் பண்ணிடுவோம் என்பார்களாம். அமைச்சரின் ஆட்களாம். எந்த அமைச்சர்? அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அவர் சொல்லவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டேன். சொல்லவில்லை. நிர்மலா தேவி இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. வழக்கறிஞர் என்ற முறையில் அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. கடத்தப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுகிறது. வேறு விதமான அச்சமும் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...