
ஆந்திராவிலிருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 170 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்ததோடு ஆந்திரா, கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும், வேளாங்கண்ணி அடுத்துள்ள புதுப்பள்ளி பாலம் அருகில் கைமாற உள்ளதாகவும் தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அப்படி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மற்றும் கர்நாடகவைச் சேர்ந்த பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் வந்த 9 நபர்களைத் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அப்போது காரில் 2 கிலோ எடையுள்ள 85 கஞ்சா பொட்டலங்கள் வீதம் 170 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 170 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வேட்டைகாரனிருப்பு கண்டியன்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சுதன் ராஜ், கேரளாவைச் சேர்ந்த 4 நபர்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 2 நபர்கள் என 9 பேரையும் போலீசார் கைது செய்து நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட கஞ்சா மூட்டைகளைப் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், தனிப்படை போலீசாரைப் பாராட்டினார். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.