Advertisment

'இந்தியாஸ் வாட்டர் வாரியர் விருது' பெறும் முதல் தமிழன் நிமல் ராகவன்!

Nimal Raghavan is the first Tamilian to receive 'India's Water Warrior Award'!

இந்தியாவில் நீர் மேலாண்மை, நீர்நிலை மராமத்து பணிகளில் சிறந்து விளங்குவோர்க்கு பெட்டர் இந்தியா நிறுவனம் 'இந்தியாஸ் வாட்டர் வாரியர்' விருது வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பல கட்ட தேர்வுகள் நடந்தது. முதல் சுற்றில் 15 பேர் தேர்வாகி பிறகு 10 பேர், அடுத்து 5 பேர் கடைசியில் ஒருவரை தேர்ந்தெடுக்க. வாக்கெடுப்பு மற்றும் பணிகளின் சான்றுகளை வைத்து தேர்வு செய்தனர். அந்த ஒருவர் தமிழக இளைஞரான நிமல் ராகவன் என்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக உள்ளது.

Advertisment

விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான நிமல் ராகவனை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஒரு குளத்தின் கரையில் வைத்து சந்தித்த போது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.

Advertisment

''நாடியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து பொறியியல் படித்து பிழைப்பிற்காக வெளிநாடு சென்றேன். 2018 ல் சொந்த ஊருக்கு திரும்பிய போது கஜா புயலின் தாக்கத்தை கண்டேன். உயிரினும் மேலான எங்களின் வாழ்வாதாரமான தென்னை உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து கிடப்பதைப் பார்த்து குழுவாக இணைந்து மீட்பு பணியும் நிவாரணப் பணியும் செய்தோம். பிறகு தான் நீர் மேலாண்மையை கையிலெடுக்க நினைத்து கைஃபா அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்போடு டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை தூர்வாரி மீட்டெடுத்த போது பல வருடங்களுக்கு பிறகு தண்ணீரை நிரப்பி பார்த்த சந்தோசம் கிடைத்தது.

தொடர்ந்து பல பணிகள் செய்தோம். எங்கள் பணிகளைப் பார்த்து 'மில்கி மிஸ்ட்' நிறுவனம் ஒரு பொக்கலின் வாங்கி கொடுத்தார்கள். மிலாப் நிறுவனம் நிதி பெற்றுக் கொடுத்தார்கள். ஊர்மிளா எண்டர்பிரைசஸ் நிறுவனம் 2 பொக்கலின் கொடுத்தார்கள். இந்த ஊக்கத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிய பணிகள் புதுக்கோட்டை, நாகை, பெரம்பலூர் என தமிழ்நாட்டில் இதுவரை 125 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை சீரமைத்தோம். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உ.பி அலகாபாத்தில் சுதந்திர காலத்தில் சுற்றுலா தளமாக இருந்து சேதமடைந்து கிடந்த 'மெக்பெர்சன்' என்ற ஏரியை ராணுவத்துடன் இணைந்து சீரமைத்தோம். அடுத்து இலங்கை, சோமாலியா, யூக்வெடார் உள்பட சில நாடுகளில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்க இருக்கிறோம்.

இத்தனை பணிகளையும் செய்யும்போது பல இடையூறுகள் வந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தண்ணீர் சேமிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் வெற்றி கிடைத்து வருகிறது. மேலும் ஏரி, குளங்களில் வெட்டப்படும் மண்ணைக் கொண்டு கரைகள் அமைப்பதுடன் எஞ்சிய மண்ணை வைத்து சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்காக நாட்டு மரங்களையும், பூ, காய், கனிகள் தரும் மரங்களையும் நட்டு குறுங்காடுகள் அமைத்திருக்கிறோம். இதனால் அழிந்து வரும் நாட்டு மர இனங்களும் பாதுகாக்கப்படுகிறது. எப்போதும் என் பணி தொடரும்'' என்றார் தன்னம்பிக்கையுடன்.

Award pudukkottai Thanjai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe