Nilgiri tahr Project Launched

‘வரையாடு’ என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் ‘நீலகிரி வரையாடு’ என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவி ஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காகப் புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகள் ‘மவுண்டன் மோனார்க்’என்று அழைக்கப்படுகிறது.

Advertisment

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழின்சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில்நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், பதினெண்மேல்கணக்கு நூல்களான நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

கி.பி 1600-1700-இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து ‘குறத்தி மலை வளம் கூறல்’ என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்குச் சான்றாக, நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

Nilgiri tahr Project Launched

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசின்முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வீ. நாகநாதன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் எஸ். ராமசுப்ரமணியன், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் என். ஜெயராஜ், நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த பிரவீன் சண்முகானந்தம் மற்றும் தனுபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.