
தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களையும் இணைக்கும் மலை பகுதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதி. வனப்பகுதி சாலை வழியே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஏராளமான மலை கிராமங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் வசித்து வருகிறார்கள். அடர்ந்த வனத்தில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமை, கரடி, செந்நாய், மான்கள் என வன உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. அதே போல் இந்த காட்டுப் பகுதியை பல வருடங்களுக்கு முன்பே புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்து அது நடைமுறையில் உள்ளது.
ஏற்கனவே புலிகள் சரணாலயம் என்ற பெயரை காரணம் காட்டி மலைவாழ் மக்கள் வனப் பொருட்கள் சேகரிக்க காட்டுக்குள் செல்லும் போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது வனத்துறை. இந்த நிலையில் தான், இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யலாமா என்ற நீதிமன்றத்தின் கருத்து மலைவாழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பழங்குடி மக்கள் வேதனைப் படுகிறார்கள்.
இரவு நேர போக்குவரத்தை தடைசெய்யக் கூடாது என மலைப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டத்தில் இறங்க தொடங்கியுள்ளது. 2ந் தேதி தாளவாடியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து பொது நல சங்கங்கள், அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்தை தடை விதிப்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் வருகிற பிப்ரவரி 18-ம் தேதிக்குள் மலை மக்களின் கருத்தை கேட்டறிந்து வனத்துறை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வனத்துறையை பொறுத்தவரை மலைவாழ் மக்களுக்கு எதிரான நிலைபாட்டையே எடுக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள மாட்டார்கள். மலையில் விளைவிக்கப்படும் விவசாயம் சார்ந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு பகல் இரவு போக்குவரத்து மிகவும் அவசியமாக உள்ளது. அதே போல் இரு மாநில அளவில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் லாரிகள் மூலம் தொடர்ந்து போக்குவரத்து நடைபெறுகிறது. ஆகவே இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய கூடாது. அப்படி தடை செய்யப்படும் பட்சத்தில் அது இரு மாநில மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும்.
வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்டறிந்து பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மாற்று ஏற்பாடாக இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யாமல் மாற்று வழியை வனத்துறையினர் முன்னெடுக்க வேண்டும். இவை குறித்து எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள், வியாபாரிகள், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்து ஆலோசித்து தான் ஒருமித்த கருத்தை வனத்துறையும் ஈரோடு மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்" என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எக்.ஸ். எம்.எல்.ஏ.சுந்தரம் கூறினார்.
மேலும், இவை போன்ற மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 25 பேர் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தாளவாடி மலை மக்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கொண்டு செல்லும் என்பதோடு, விரைவில் ஒரு நாள், ஒட்டு மொத்த மலை மக்களையும் திரட்டி திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான போராட்டம் நடத்துவதாகவும் முடிவு செய்துள்ளனர்.