
காட்டுமன்னார்கோவில் அடுத்த பெரியபுங்கநதி ஏரியில் இருந்து வெளியேறும் முதலைகளால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக உயிர் பயத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் மாற்றுக் குடியிருப்பு ஏற்படுத்தித் தரவேண்டி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரியபுங்கநதி. வீரானந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இதில் உள்ள காலனித்தெருவில் சுமார் 80- க்கும் மேற்பட்ட வறுமைகோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரிக்கரையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த ஏரிக்குக் கீழணையில் இருந்து வடவாறு வழியாகத் தண்ணீர் வரும். அந்தத் தண்ணீருடன் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளும், தண்ணீர் வரும் வழிகளில் குறிப்பிடும் வகையில் பெரியபுங்க நதி ஏரி ஆழமாக அமைந்துள்ளதால் முதலைகள் படுகைககளை உருவாக்கி அங்கேயே தங்கிவிடுகின்றன.
கோடைகாலங்களில் இரைத்தேடி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து நாய்கள் மற்றும் ஆடுகளை உணவாக்கிக்கொள்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் முதலைக்குப் பயந்து வீதிகளில் உறங்கும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் கடந்த 3- ஆம் தேதியன்று இரைத்தேடி குடியிருப்பிற்கு வந்த முதலை ஒன்றைப் பிடித்து கட்டிவைத்த அப்பகுதி இளைஞர்கள், சிதம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு எஞ்சியுள்ள முதலைகளையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனிடையே நேற்று (06/05/2020) அதிகாலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று புகுந்து பீதியை ஏற்படுத்தியது. சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக முதலையைப் பிடித்த இளைஞர்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரிடம் கேட்டபோது, "கடந்த வருடங்களில் வண்டல் மண் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏரி 15 அடிகள் வரை ஆழமானது. இதனால் இங்கு வந்த முதலைகள் வெளியேறாமல் இங்கேயே படுகைகளை அமைத்துத் தங்கிவிட்டன. உணவு தேடி அவ்வபோது இவைகள் வெளியேறி கால்நடை கொட்டகை, வீடுகளுக்கிடையே உள்ள குறுகிய சந்துகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுகின்றன.
தெருநாய்கள், ஆடுகள் ஆகியவற்றைக் கடித்த சம்பவங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளதால், இந்த முதலைகளால் தங்களின் குழந்தைகளுக்கோ அல்லது தங்களுக்கோ ஏதும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்னதாக எங்களுக்கு மாற்றுக் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பாகக் கோரிக்கை வைத்தார்.